Wednesday 22 February 2012

எனது மேடைக்கவிதைகள்-1


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் 
நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 )


வகுப்பறை


வகுப்பறையே . . . .


நாலு வார்த்தை மழலை பேசி
நாங்கள் நடக்க ஆரம்பித்த போது
உனக்குள் திணித்து
உட்கார வைத்தார்கள்.

உடனே எங்களின்
வாய்களைக் கழட்டி
பைகளுக்குள் வைத்துக் கொண்டோம்
உன் கட்டளைப்படி

இன்னும் பல பேர்
வாய்களை வெளியே எடுக்கவேயில்லை
எடுத்தவர் வாய்களும்
புத்தகங்களால் நைக்கப்பட்டிருக்கின்றன.

கைகட்டி வாய்பொத்தி
அமைதித்தவம் பழக்கினாய்
அதுதான் ஒழுக்கமென
அசிங்கமாய் பொய் சொன்னாய்

உன்னால்தான்
மௌனமே இந்நாட்டின்
தேசிய எதிர்வினையானது

ப+க்கள் மலர்ந்தாலும் சரி
ப+கம்பம் பிளந்தாலும் சரி
பாராளுமன்றத்தில் பணக்கட்டுகள்
பறந்தாலும் சரி
விளையாட்டுப் போட்டிகளில்
விளையாடி தீர்த்தாலும் சரி
மௌனமே இந்நாட்டின்
தேசிய எதிர்வினையானது.

கேள்வி தாட்களை அடுக்கிக் கட்டிய
சிறைகளுக்குள் கிடந்தோம்
எந்தக் காற்றும் வெளிச்சமுமின்றி.
கேள்விகள் உனக்கு மட்டுமே
உரிமையாயிருந்தன .. .
நாங்கள் பதிலளித்தோம்
எங்களுடையதை அல்ல
நீ தயாரித்து அளித்தவற்றை.

கேள்விகளோடு உனக்குள்
வருபவர்களிடம்
நீயும் ஏன்
கேள்விகளையே நீட்டுகிறாய்.




பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள்
பதிலுக்கு சில பக்கங்களையாவது
அவர்களுக்குள்ளே நீ
எழுத வேண்டாமா?

உன்னால் இடையில்
உதறப்பட்டவர்கள் கூட
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் . . .
வேலை செய்தால் உற்பத்தி பெருகும்
நீ ஏன்
வேலை இல்லாதவர்களை
உற்பத்தி செய்கிறாய்?

நீ தரும் படிப்புக்கும்
நாங்கள் பெறும் அறிவுக்கும்
இடையில் இருந்த
இடைவெளியில்தான்
இராமர்
பாலமே கட்டிவிட்டார்
இன்னும் இருக்கலாமா
இந்த இடைவெளிகள்

ப+க்கள் ப+த்ததை புரிய வைத்தாயே
அதற்காக
எம் தோழர்களின் உடம்பெல்லாம்
வியர்வை ப+த்ததை சொல்லிவைத்தாயா?

காய்கள் காய்த்ததை வகைப்படுத்தினாயே,
அதற்காக
எம் தோழர்களின் 
கைகள் காய்த்ததை சொல்லி வைத்தாயா?

காய்கள் பழுத்ததை கனிகள் என்றாய்,
அதற்காக
எம் தோழர்களின்
கைகள் பழுத்ததை என்னவென்றாய்?

வகுப்பறையே
நாங்கள் பொது அறிவு வளர்க்கிறோம்
பொத்தாம் பொதுவில்.

உன் வளர்ப்பு அப்படி

காஷ்மீரின் சிவந்த ஆப்பிள்களை மட்டும்
கடித்து சுவைதத படி
குஜராத்தின் பால்வளத்தை மட்டும்
பவுடராக்கி குடித்தபடி
ஆந்திராவின் மிளகாய்களில் மட்டும்
மசாலா அரைத்தபடி
தாமிரபரணியின் தண்ணீரைமட்டும்
பாட்டில்களில் வாங்கியபடி
ஈழத்தின் தேயிலையை மட்டும்
உறிஞ்சி குடித்தபடி
ஈராக்கின் பேரிச்சையில் மட்டும்
இரும்புசத்தை ருசித்தபடி
மேற்கு வங்கத்தின் சணலில் மட்டும்
கயிறுகள் திரித்தபடி
நாங்கள் பொது அறிவை வளர்க்கிறோம்
பொத்தாம் பொதுவில்
உன் வளர்ப்பு அப்படி.

அறிவு முடி அதிகம் வளர்ந்து
அசிங்கமாய் தொங்கினால்
கட்சி சின்னங்கள் ஒட்டப்பட்ட
சலூன்களுக்குள் போகிறோம்.
அவர்கள் கத்தரித்து அலங்கரிக்கிறார்கள்
அவர்களுக்கேற்ப. . .
முழுமொட்டையும் அடிப்பதுண்டு,
அதனாலென்ன
மீண்டும் நாங்கள் பொதுஅறிவு வளர்ப்போம்
பொத்தாம் பொதுவில்
உன் வளர்ப்பு அப்படி.

சுரண்டல்களிலேயே மோசமானது
சொரணைச் சுரண்டல் தான்
அதைச் செய்கிற வகுப்பறையே
நீ முதல் வகுப்பு குற்றவாளி

வகுப்பறையே
நீ தரும் கல்வி ஆணி வேர்களாய் அல்ல
மானின் கொம்புகளாய் சுருண்டு நிற்கிறது.
மரங்களினிடையே சிக்கிக் கொள்ளவும்
கொம்பில்லாத புலிகளால் உண்ணப்படவும்
வசதியாக

உன் அறிவியல்
சூரிய வெளிச்சத்தில் இலைகள் தளிர்க்கும் என்றது
தாமரை மலரும் என்றது
வெளியில் என்ன அப்படியா நடக்கிறது?
சூரியன் இருந்தால் இலைகள் இல்லை
இலைகள் இருந்தால் சூரியன் இல்லை
இரண்டும் இருந்தால் தாமரை இல்லை
வெளியில் என்ன அப்படியா நடக்கிறது.

உன் அறிவியல் சுத்தியலை
முதல்வகை நெம்புகோல் என்றது
இம்மியளவும்  
அதனால் நெம்ப முடியவில்லை
 சனாதனங்களை.

உன் அறிவியல்
காற்றும் நீரும் மாசுபடுவதை
கவனமாய்ப் போதிக்கிறதே
அறிவு மாசுபடுவதை
அளந்திருக்கிறாயா நீ.

உன் உள்ளே
கரும்பலகைகள் கணினிப் பலகைகள்
வெளியே
வெளிச்சமாய் விலைப் பலகைகள்
சுவாசக் காற்றால்
கிடைக்க வேண்டிய நீ
முதல் உள்ளவர்க்கே
முகத்தைக் காட்டுகிறாய்
முயற்சி உள்ளவரின்
மூச்சை இறுக்குகிறாய்.

சமத்துவச்சிற்பத்தின்
உளியாய் இருக்க வேண்டிய நீ
இப்படியா
வர்க்கப்பிளவுகளின்
ஆயுதசாலையாய் ஆவது !

அடைக்கலம் தேடிவந்த
இந்த ஆட்டுக்குட்டிகளை
இப்படியா
அசைவ மேய்ப்பர்களிடம்
அடகு வைத்துப்போவது ?

வகுப்பறையே
நீ விண்ணை அளக்க கற்றுக்கொடு
மண்ணை பிளக்க கற்றுக்கொடு
அதற்கு முன்னால்
அதற்கு முன்னால்
மனிதனை மனிதனுக்கு கற்றுக்கொடு
சமூக விடுதலையின்
சாவியை
எங்கள் கைகளில் கொடு !

உள்ளேன் ஐயா வணக்கம்.




1 comment:

  1. i have very much been impressed by this story
    thank you for your valuable contribution

    ReplyDelete